கோப்புப் படம்
- க. சுபகுணம்
- பிபிசி தமிழ்
“1984ல எம்ஜிஆர் துப்பாக்கி சூடு நடத்தவே உத்தரவு கொடுத்தாரு. அப்பவே எதிர்த்து நின்னு உயிரைத்தான் விட்டோமே தவிர, எங்க இடத்தை விட்டுக்கொடுக்கல. என்னவோ நாங்க இப்பதான் இங்க வந்த மாதிரி பேசுறாங்களே, உங்களுக்கு இந்த ரோடு என்ன சொந்தமானு கேட்குறாங்களே! ஆமா, இது எங்க ரோடுதான். நாங்க உயிரையேகூட விடுவோம், ஆனா இந்த மண் மீதான எங்க உரிமைய விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்று சென்னையின் லூப் சாலையில் சாலையோர மீன் கடையை வைத்திருக்கும் முல்லைக்கொடி உணர்ச்சி பொங்கப் பேசினார்.
மீன் கடைகளை நெருங்கியிருந்து பார்த்தவர்களுக்கு அதன் தனித்துவமான அழகு தெரியும். “வஞ்சரம், காலா, மத்தி, அயிர, நண்டு, பாற, இறா” என்று மீன்களின் பெயர்களை மீனவப் பெண்கள் கூவி விற்பதையே ஒரு கவிதையாக வடிக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு கவிதைக்குத்தான் ஆபத்து வந்திருப்பதாக சென்னை மெரினா கடற்கரை பகுதியிலுள்ள லூப் சாலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கு வழக்கமாக இரண்டு விதமான வேலைகள் நடக்கும். மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் மீன்களை மீனவப் பெண்கள் விற்பனை செய்வார்கள். அடுத்ததாக, அப்படி விற்கப்படும் மீன்களை வெட்டிக் கொடுப்பதற்காக மீன் வெட்டும் பெண்களும் அங்கேயே அமர்ந்திருப்பார்கள்
மீனவர்கள் தொடர் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன் வியாபாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவு என்று கூறி, மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் மீன்களைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று இந்தப் பிரச்னை தொடர்பாக மீனவ மக்கள் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் மனு அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நேரத்தில், மீனவப் பெண்கள் தங்களிடம் மீதம் இருந்த சொற்ப அளவிலான மீன்களை விற்று முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் லூப் சாலையில் வியாபாரத்திற்கு அமர்ந்ததாகவும் அதற்கு அனுமதிக்காமல் அவர்களுடைய மீன் வைக்கும் ஐஸ் பெட்டி, கூடைகள் ஆகியவற்றை போலீஸ் அப்புறப்படுத்தியதாகவும் அந்தப் பகுதியில் இருந்த மீனவப் பெண்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.லூப் சாலையில் இருந்த மீன் கடைகளை அகற்றிய நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மீனவர்கள் தங்களுடைய ஃபைபர் படகுகளை சாலையின் நடுவே போட்டு, சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அதுகுறித்துப் பேசிய தென்னிந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் கே.பாரதி, “நாங்கள் இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.
அப்படியிருக்கும்போது, வெறுமனே கிடக்கும் ஐஸ் பெட்டிகளையும் மீன் கூடைகளையும்கூட அப்புறப்படுத்த முயல்வது, ஏற்கெனவே மன உளைச்சலில் இருக்கும் மீனவ மக்களைச் சீண்டிப் பார்க்கும் செயல்,” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது தெரிவித்தார்.
மேலும், “இதுகுறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறோம், ஆகவே எதுவாக இருந்தாலும் அங்கு பேசிக் கொள்ளலாம் எனச் சொல்லியும் மீண்டும் மீண்டும் வந்து பிரச்னையை உண்டாக்குகிறார்கள்.
அதனால்தான் படகுகளை சாலையின் குறுக்கே போட்டுவிட்டு, நாங்கள் மறியலில் அமர்ந்தோம். இதைச் செய்ய வைத்தது அதிகாரிகள்தான்,” என்று தெரிவித்தார்.
கடற்கரைக்கு அழகே மீனவர்கள்தான்
“நாங்க இதே இடத்துலதான் தலைமுறை தலைமுறையா வாழ்றோம். என் பாட்டன், தாத்தன் தொடங்கி, இப்போ என் பிள்ளைகள் வரைக்கும் மீன்பிடித் தொழிலைத்தான் செஞ்சிட்டு வராங்க.
எங்க வீட்டு ஆம்பளைங்க மீன் பிடிச்சுட்டு வந்தா, அந்த மீன்களை நாங்க இங்க கொண்டாந்து விற்போம். அதை வித்துதான் சோறு போட முடியும், குடும்பம் நடத்த முடியும். அந்த மீனை விற்கவிடாம, கீழ கொட்ட வெச்சாங்கனா நாங்க எங்க போய் பிழைக்குறது?” என்கிறார் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் கல்யாணி.
“கணவரை இழந்த பெண்கள், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால் துன்பப்படும் பெண்கள் என்றும் பலரும் இங்க மீன் வெட்டிக்கொடுக்குற வேலையைச் செய்ய வராங்க. அவங்க நிலைமை என்ன ஆகுறது?” என்று கேள்வியெழுப்புகிறார் கல்யாணி.
“எங்கள் வாழ்க்கையே கடலும் கடற்கரையுமாக இருக்கும்போது, அந்தக் கரையோரத்தில் கடை வைக்காமல் வேறு எங்கு சென்று வைப்பது?” என்று கேள்வியெழுப்புகிறார் முல்லைக்கொடி.
மேற்கொண்டு பேசியவர், “கடற்கரையோட அழகை நாங்க கெடுக்குறதா சொல்றாங்க, ஆனா அவங்க எல்லாம் இங்க வரதுக்கு முன்னாடியே, பல தலைமுறைகளாக இங்க வாழ்ந்துட்டு இருக்கும் மீனவர்கள்தான் இந்தக் கடற்கரைக்கே அழகு,” என்றும் கூறுகிறார்.
Copy paste BBC TAMIL



No comments: